'கே.ஜி.எஃப்' படங்களைத்தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா' சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு நாளை (15.10.2022) வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் 'காந்தாரா' படத்தை பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காந்தாரா படம், பிரம்மிப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களைநினைத்து நீங்களே மிகவும் பெருமைப்பட வேண்டும். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இதே போன்று தொடருங்கள். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.