Skip to main content

நான் திரையில் பார்த்து வியந்த நடிகர் போனில் அழைத்து பாராட்டினார் - கவின் நெகிழ்ச்சி

 

dhanush praised kavin dada movie

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாடா' படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். 

 

படத்தைப் பார்த்த கமல்ஹாசன், சூரி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இயக்குநரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு நெகிழ்ச்சி சம்பவமாக தன் குழந்தையை தனியாக வளர்க்கும் தாய் ஒருவர், டாடா படம் பார்த்த பிறகு தனது கணவருடன் சேர இருப்பதாக இயக்குநரிடம் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இந்த நிலையில், டாடா படக்குழுவிற்கு தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளதாக நடிகர் கவின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டாடா படத்தைப் பார்த்துவிட்டு தனுஷ் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரிடம் இருந்து அழைப்பைப் பெறுவது உண்மையில் ஒரு அதிசயமான தருணம். தனுஷ் சாரின் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரின் சிறந்த திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக உங்களைப் பெரிதும் மதிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.