துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகர் தனுஷ். அவர் நடித்த அடுத்தடுத்த படங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் எனப் பன்முக ஆளுமை கொண்ட தனுஷ், ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதன் மூலம், இந்தியஅளவில் கவனம் பெற்ற நடிகர் தனுஷுக்கு, ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களான அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்க உள்ளனர். ‘தி கிரே மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ‘தி கிரே மேன்’ நாவலை அடிப்படியாகக் கொண்டதாகும். இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து தனுஷ் நடிக்கவுள்ளது, தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.