/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/185_11.jpg)
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்று விட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு இந்த குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர்.
பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில்போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தனுஷ், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு எண் ஏதுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை கருத்தில் கொள்ளாமல் வழக்கைதள்ளுபடி செய்தது ஏற்புடையது அல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் முடிவெடுக்க வேண்டும்.
தனுஷின் பிறப்புசான்றிதழின் உண்மை தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுஏற்கத்தக்கதல்ல. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 13 ஆம் தேதிக்கு (13.12.2022) ஒத்திவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)