/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/460_15.jpg)
ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் மற்றும் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். அதே சமயம், இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் இயக்குவதோடு மட்டுமல்லாது நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது.
இதில் ‘குபேரா’ படம் தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, பாங்காங், மும்பை பகுதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அடுத்தடுத்து வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில் யாசகம் பெறும் நபராக தனுஷ் நடித்துள்ளதாக தெரிகிறது. பின்பு நாகர்ஜூனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப் வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. இடையில் தனுஷ் கோயில் முன்பு தலைத்றிக்க ஓடும் காட்சி, ரசிகர்களை கவர்கிறது. இறுதியில் தனுஷ் ஆரம்பத்தில் காட்டப்பட்ட யாசகம் பெறும் நபரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புது தோற்றத்தில் இருக்கிறார். டீசர் முழுக்க வசனங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இசையைப் பயன்படுத்தியே காட்சியை நகர்த்துகின்றனர். இந்த க்ளிம்ப்ஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)