தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள புதுப் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். 

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் இப்படம் தனது சிறு வயது அனுபவம் மற்றும் தன் வாழ்வில் சந்தித்த சில கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கற்பனையாக எழுதப்பட்டுள்ளதாக தனுஷ் தெரிவித்தார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்துள்ளது. இதில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். 

ட்ரெய்லரை பார்க்கையில், ஒரு கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரன் மற்றும் அவரது மனைவி கீதா கைலாசம், தங்களுக்கு பிறகு இந்த இட்லி கடையை யார் பார்த்துக்க போகிறார் என்று பயப்படுகின்றனர். இவர்களது மகன் தனுஷ், வெளிநாட்டில் சத்யராஜின் ரெஸ்டரண்டில் சிறப்பாக வேலை செய்து வருகிறார். ஆனால் அவருக்கும் சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கும் ஒரு பிரச்சனை வெடிக்கிறது. இதனால் தனுஷ் சொந்த ஊருக்கே சென்று அவர் அப்பா நடத்தி வந்த இட்லி கடையை ஆரம்பிக்க துவங்குகிறார். ஆனால் அருண் விஜய் இவருக்கு தடையாக இருக்கிறார். இந்த தடையை தாண்டி தனுஷ் வெற்றிகரமாக இட்லி கடை நடத்தினாரா, அருண் விஜய்க்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பதற்கு பதில் சொல்லும் படமாக இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.