கடந்த வருடம் வெளியான பாலிவுட் படங்களில் டாப் ஹிட், அந்தாதுன். இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்புகிறேன். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சித்தார்த் முன்பு ஒருமுறை ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த பலரும் இது அறுமையான த்ரில்லர் படம். தமிழில் இதுபோல ஒரு படம் எடுத்தால் நன்றாகதான் இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்தாதுன் தமிழ் ரீமேக் படத்தில் ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில் சித்தார்த், தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வருட இறுதிக்குள் இப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த சர்வதேச படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்' திரைப்படம் இந்தியாவில் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசுகையில் நான் ஹிந்தியில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளேன். அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்றார்.
மேலும், அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஆம், அந்த ஐடியா எனக்கு இருக்கிறது. அது நல்ல த்ரில்லர் படம். அதை தமிழில் ரீமேக் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றார்.
அந்தாதுன் படத்தின் ரைட்ஸை வாங்கி அதை தயாரிக்க மட்டும் இருக்கிறாரா? இல்லை மேலும் அவரே ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.