தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு தமிழில்'வாத்தி' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திரையுலகிற்கு வந்து 20ஆண்டுகளை கடந்துள்ள தனுஷிற்கு, அவரது பணிகளை பாராட்டி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்தார்.
இந்நிலையில் 'வாத்தி' படக்குழு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷ் தன் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்த புகைப்படத்தையும் தற்போது பள்ளி ஆசிரியராக நடித்து வரும் 'வாத்தி' படத்தின் புகைப்படத்துடன் இணைத்து போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு, 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.