dhanush captain miller trailer released

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்...’,‘உன் ஒளியிலே...’,‘கோரனாரு...’ போன்ற பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. பின்பு யு/ஏ சான்றிதழுடன் ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரின் ஆரம்பத்தில்,‘வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன்...’, ‘ஊர்க்காரன் கண்ணுக்கு நீ துரோகி... உண்மையிலே நீ யாரு...’ என முன்னுக்கு பின் முரணாக தனுஷ் கதாபாத்திரம் குறித்து தொடங்குகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘நீ யாரு, உனக்கு என்ன வேணுங்கிறத பொறுத்து நான் யாருங்கிறது மாறும்’ என்ற வசனத்துடன் தனுஷ் அறிமுகமாகிறார். பின்பு வெள்ளைக்காரன் ஆட்சி, ஊர் மக்கள் துயரம் என அதற்கு எதிராக தனுஷ் குரல் கொடுப்பது போல் ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் பல்வேறு கெட்டப்புகளில் தனுஷ் வருகிறார். அது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.