‘வட சென்னை 2’ மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெற்றிமாறனையும் தனுஷையும் எங்கு சந்தித்தாலும் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘வட சென்னை’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒரு கல்ட் கிளாசிக் படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் ‘வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி’ என்ற தலைப்பில் உருவாகுவதாக பார்ட் 1-பட இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷின் வேறு சில கமிட்மெண்டுகளால் தள்ளி போனது.
பின்பு வெற்றிமாறன் திடீரென சிம்புவுடன் படம் பண்ணுவதாக கமிட்டான நிலையில் அது வட சென்னை 2-வாக இருக்கலாம் என்ற செய்திகள் வெளியானது. மேலும் தனுஷ், வட சென்னை பட உரிமையை வெற்றிமாறனுக்கு தரவில்லை என்றும் ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் தனுஷ் தர மறுக்கவில்லை என்றும் சிம்பு படம் வட சென்னை இரண்டாம் பாகம் அல்லாது, அப்பட உலகை மையப்படுத்தி உருவாகும் புதுப்படம் என்றும் வெற்றிமாறன் விளக்கம் அளித்தார். சிம்பு படம் முடிந்த பின்பு வாடிவாசல் முடித்துவிட்டு வட சென்னை 2 தனுஷை வைத்து ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதுவரை வட சென்னை 2 குறித்து இவைதான் அப்டேட்டாக இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இப்படம் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சமீபத்தில் நடந்த இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ், வட சென்னை 2 தொடர்பாக ஒரு புது அப்டேட்டை பகிர்ந்துள்ளார். மதுரையில் நடந்த இட்லி கடை ப்ரீ ரிலீஸ் இந்கழ்ச்சியில், “வட சென்னை 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருஷம் ஆரம்பிக்கும் ரிலீஸ் அதுக்கு அடுத்த வருஷம் ரிலீஸாகும்” என்றார்.
இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், கைவசம் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம், பின்பு மாரி செல்வராஜுடன் ஒரு படம் மற்றும் அப்துல் கலாமின் பயோ பிக் என அடுத்தடுத்து கமிட் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.