தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள புதுப் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. தொடர்ந்து ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற தனுஷுக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு ரசிகர் வேல் பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் நிகழ்ச்சில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், தனது குடும்பத்துக்கும் இந்த மேடைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக ஒரு சோகக்கதையை சொன்னார். அவர் சொன்னதாவது, “என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு ஊர் மதுரை. அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு, அதுல முக்கியமான ஒரு காரணத்தை சொல்றேன். எங்க அப்பவும் அம்மாவும் இங்க தான் பொறந்தாங்க. மல்லிகாபுரம் எங்க அப்பா பொறந்த ஊர், சங்கராபுரம் எங்க அம்மா பொறந்த ஊர். இந்த படத்துல வர மாதிரியே எங்க அப்பாவும் பொழப்ப தேடி சென்னைக்கு வர முடிவெடுத்தார். ஆனா அவர்கிட்ட சென்னைக்கு போறதுக்கு பஸுக்கு காசில்ல. அதனால மதுரையில இருக்குற சொந்தகாரங்கக்கிட்ட காசு வாங்கிட்டு போலாம்னு இருந்தார். ஆனா மதுரைக்கு போறதுக்கு கூட காசில்லை. அதனால நடந்தே வந்தார். அவர்கூட எங்க அண்ணனும் அம்மாவும் வந்தாங்க. அண்ணனுக்கு 4 வயசு. அம்மா மூணு மாசம் கர்ப்பம். கர்ப்பிணியா இருந்துகிட்டு 120 கி.மீ. நடந்தாங்க. அவங்க அப்படி கஷ்டப்பட்டு மதுரைக்கு வந்து, ஏறுன மேடை தான் இந்த மேடை.
நான் எவ்ளவோ ட்ரை பண்ணேன், எங்க அப்பா அம்மாவ இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துரனும்னு. ஆனா சில காரணங்களால அவங்க வர முடில. அவங்க இங்க வந்திருந்தாங்கன்னா இந்த மொமெண்ட் இன்னமும் எனக்கு முழுமையாவும் உண்மையாவும் இருந்திருக்கும்” என சற்று வருத்தமுடன் பேசினார்.