Aayirathil Oruvan

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படம், வெளியான போது வசூல் ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்தது. சமூக வலைதளங்களின் பயன்பாடு பரவலான பிறகு இப்படத்தின் பிரம்மாண்டத்தை உணர்ந்த ரசிகர்கள், இன்றளவும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஏகோபித்த ஆதரவைக் கண்ட இயக்குனர் செல்வராகவன், இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்று 'ஆயிரத்தில் ஒருவன் 2' குறித்தஅப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார். எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியான இந்த அப்டேட் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதனையடுத்து, இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்டை பகிர்ந்த நடிகர் தனுஷ், இப்படம் குறித்த தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

Advertisment

நடிகர் தனுஷ் அப்பதிவில், "இது மிகப்பெரிய படம். முன்தயாரிப்பு பணிகளுக்கே ஒரு வருட காலம் எடுக்கும். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் கனவுத் திரைப்படம். இப்படத்திற்கு நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். உங்களது காத்திருப்பிற்கு உரிய மதிப்பை அளிக்கும் வகையில் எங்களால் முடிந்த உழைப்பைச் செலுத்துவோம். இளவரசன் 2024-ஆம் ஆண்டு மீண்டும் வருவான்" என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் தனுஷின் இந்த ட்வீட்டானது இணையத்தில் வைரலாகி வருகிறது.