/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/122_42.jpg)
தனுஷ் நடிப்பு இயக்கம் என பிஸியாக பயணித்து வருகிறார். இப்போது நடிகராக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ பிக், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். இது போக அவரே இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தையும் கவனித்து வருகிறார். இதில் இளையராஜா பயோபிக் படம் தயாரிப்பு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படங்களில் முதலில் குபேரா படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படி தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர் தற்போது புதிதாக ஒரு பயோ- பிக் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு பிரான்சில் தற்போது நடந்து வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. ‘கலாம்’ என்ற தலைப்பில் ‘தி மிஸைல் மேன் ஆப் இந்தியா’ என்ற டேக் லைனுடன் இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகிறது.
இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவ்த் இயக்குகிறார். இவர் கடைசியாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு நிறைய பயோ - பிக் படங்களுக்கு கதை எழுதிய சைவின் குவாட்ராஸ் திரைக்கதை எழுதியுள்ளார். அபிஷேக் அகர்வால், அனில் சுங்காரா, பூஷன் குமார், கிரிஷன் குமார் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். பட போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், அப்துல் கலாமாக நடிப்பதை பாக்கியமாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பட அறிவிப்பு சர்பிரைஸாக வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)