ராயன் படத்திற்கு பிறகு ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். அதே சமயம், இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதோடு அதில் நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷின் புதுப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க கோபுரம் ஃபிலிம்ஸ் சாரில் அன்பு செழியன் தயாரிக்கிறார். இப்படம் தனுஷின் 55வது படமாக உருவாகிறது. படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் அன்பு செழியன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமரன் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகரான தனுஷை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.