கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனுஷின் 50வது பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதிஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதனை ஒரு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதில் தனுஷ் மொட்டை கெட்டப்புடன் ரத்தம் ஒழுகிய நிலையில் பின் திரும்பி நிற்கிறார். இதேபோல் தான் இப்பட அறிவிப்பு வெளியான போஸ்டரிலும் இடம் பெற்றிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டைட்டிலோடு தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகஇப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது.