
சினிமா, சின்னத்திரை, டப்பிங் துறை என்று தொடர்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வரும் நடிகை தேவிப்ரியாவுடன் ஒரு சந்திப்பு.
எப்போதும் சிரித்துக்கொண்டே... இருக்கும் இடத்தைக் கலகலவென வைத்திருப்பது எனக்குப் பிடிக்கும். நான் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று எப்போதும் கமிட் செய்துகொண்டதில்லை. வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் செய்த தவறு. ஒருவேளை நான் ஹீரோயினாக நடித்திருந்தால், வேலைப்பளு குறைந்திருக்கும். ஆனால் ஹீரோயினாக ஆகாமல் விட்டதால் இப்போதும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மிக நீளமான வசனங்களை ஒரே டேக்கில் நடித்து பலமுறை கைதட்டல்கள் வாங்கியிருக்கிறேன். இதனால் பல வாய்ப்புகள் வந்தன. ஹீரோயினாக முயற்சி செய்து பார்க்கச் சொல்லி யாரும் எனக்கு அட்வைஸ் செய்யவில்லை. ஹீரோயினாக இல்லாமல் போனதால் பலமுறை நான் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். மெயின் நடிகர்களின் காட்சிகளை எல்லாம் முதலில் எடுத்து அவர்களை அனுப்பிவிட்டு அதன்பிறகு எங்களுடைய காட்சிகளை எடுப்பார்கள். இதெல்லாம் நான் சந்தித்த சவால்கள்.
கீழ்த்தரமான விமர்சனங்களைப் பார்க்கும்போது கோபம் வரும். ஆனால் அப்படி எழுதுபவர்கள் சக மக்களாலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால் நாம் அதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. நேரில் பார்த்த மாதிரியே நம்மை விமர்சிப்பார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் செய்யச் சொல்லி வற்புறுத்தும் நிலை பல காலமாக இருக்கிறது. அதற்கு நாம் ஒப்புக்கொண்டால் சோறு கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. நான் சோறு வேண்டாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, பல நடிகைகள் அப்படியான முடிவை எடுத்திருக்கிறார்கள். என் திறமையை மட்டுமே நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். யாருடனும் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ளச் சொல்லி அணுகுபவர்கள் பலர் மிகவும் டீசன்டாக நம்மை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்கிற ரீதியில் பேசுவார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு சரியான பதிலைக் கூறி, அந்த எண்ணத்தை நீக்கிவிட்டால் பிரச்சனையில்லை. வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக நளினி அவர்களின் தலைமையில் நாங்கள் சென்றிருந்தபோது எங்களுக்கான உணவு சரியாக வழங்கப்படவில்லை. உடனே அதில் தலையிட்டு எங்களுக்கு உதவியவர் மயில்சாமி சார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
சில நடிகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி செய்துகொள்வதன் மூலம் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு அது மிகப்பெரிய வலி. இறந்தவர்களைப் பற்றித் தவறாகப் பேசும் பலரும் இங்கு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அனைத்து விமர்சனங்களையும் உடைக்கிறது. சினிமாவில் நான் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை. அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை இருந்தால் மட்டுமே இங்கு நிலைக்க முடியும். தற்கொலை எதற்குமே தீர்வல்ல. வாழ்ந்து காட்ட வேண்டும்.