devi sree prasad about ilaiyaraaja

தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். கடந்த வருட தேசிய விருது விழாவில் புஷ்பா படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது வாங்கினார். இப்போது புஷ்பா இரண்டாம் பாகம் உள்பட சில தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத் அது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்நாள் கனவு நனவான தருணம். சிறு குழந்தையாக இருந்த நான், இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்கு ஒரு மாயாஜால மந்திரத்தை உண்டாக்கியது. நான் தேர்விற்கு படிக்கும் போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசை இருந்து கொண்டே இருக்கும். அவரது இசையுடன் தான் வளர்ந்தேன். அவருடைய இசையில் என்றென்றும் நான் இருப்பேன். அது ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற விருப்பத்தையும் உறுதியையும் வலுவாக என்னுள் விதைத்தது.

Advertisment

நான் இசையமைப்பாளராக மாறியதும், எனது ஸ்டுடியோவைஉருவாக்கிய போது, இளையராஜா சாரின் ஒரு பெரிய உருவப்படத்தை வைத்தேன். இளையராஜா சார் ஒரு நாள் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தர வேண்டும், அவருடைய உருவப்படத்திற்கு அருகில் நின்று நான் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும். இதுவே எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு. நமது ஆசைகளை நனவாக்க யுனிவர்ஸ் எப்போதும் சதி செய்வதால், இறுதியாக எனது கனவு நனவாகியது, குறிப்பாக எனது குரு ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணாவின் பிறந்த நாளில்.

நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். தெய்வீக இருப்பை எனது ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்து என்னையும் எனது குழுவையும் ஆசீர்வதித்த இளையராஜாவிற்கு நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து கற்பித்ததற்கு நன்றி சார். இந்த சந்தர்ப்பத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இசை லேபிள்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழுவிற்கு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் என் இசையை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய விருது வாங்கிய பின்பு இளையாராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment