Devayani emotional speech about nakkhul in Vascodagama event

ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாஸ்கோடகாமா'. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிடோர் நடித்துள்ளனர். பி.சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருண் என்.வி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தில் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் நடிகர் நகுலின் அக்கா தேவயானி கலந்துகொண்டார்

Advertisment

இவ்விழாவில் தேவயானி பேசுகையில், “என்னுடைய சின்ன தம்பி நகுலை பார்க்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது. அவருக்கும் எனக்குமான உறவு அற்புதமானது. அவர் பன்முகத்தன்மை கொண்டவர். நான் அவரின் பெரிய ரசிகை. பாய்ஸ் முதல் காதலில் விழுந்தேன் படம் வரை, அவரின் ட்ரான்ஸ்பர்மேஷன் வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு சிறந்த நடிகர், முழு படத்தையும் தன் தோழில் சுமக்க கூடியவர். நல்ல கதை, நல்ல இயக்குநர், நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்லுவார்கள் அந்த நேரத்திற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார். அது கண்டிப்பாக வர வேண்டும்.

Advertisment

அவர் என்னுடைய தம்பியாக இருப்பதால் இதை நான் சொல்லவில்லை, ஆனால் அவர் எல்லா விதத்திலும் சிறந்து விளங்கக்கூடியவர், அவரால் பாடவும், நடனமாடவும், இசையமைக்கவும் முடியும். படப்பிடிப்பு தளத்தை அவரால் துடிப்பாக வைத்திருக்க முடியும். அக்கா, தம்பி இருவரும் இந்த சினிமா துறையில் இருப்பது அபூர்வமான காம்பினேஷன். எங்கேயும் இது போல இல்லை. எனக்கு இது பெருமையான விஷயம். இன்னும் நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துகள் தம்பி. எப்பொழுதும் நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே. இந்த படத்துடன் அவரின் காத்திருப்பு முடிவடைய வேண்டும்” என்றார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நகுல், அக்காவின் பேச்சைக் கேட்டு கண்கலங்கினார். பின்பு அக்காவைக் கட்டி அணைத்தபடி அன்பை வெளிப்படுத்தினார்.