“உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை...” -இயக்குனர் தேசிங் பெரியசாமி 

desing periyasamy

இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் வெளியானபோது பெரிய எதிர்பார்ப்புகளின்றி வெளியாகி, பின்னர் படம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு பலர் திரையரங்கில் பார்த்தனர்.

இப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி பெரும் ரஜினி ரசிகர் என்பதை தொடக்கத்திலிருந்து தெரிவித்து வந்தார். குறிப்பாக படத்தில் பல ரஜினி ரெஃபரன்ஸ் ஷாட்கள் இடம்பெற்றிருக்கும். படம் வெளியானபோதே ரஜினி சார் நல்ல படங்களை பார்த்தால் கண்டிப்பாக அழைத்து பேசுவார். அதுபோல என் படத்தையும் பார்த்துவிட்டு, அழைத்து பேசுவார் என்று காத்திருக்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுனில் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். ஷூட்டிங் எதுவும் நடைபெறாததால் பிரபலங்களும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கை பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் இணையத்தில் லீக்காகி உள்ளது. இது தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில்,

“வாழ்த்து தெரிவித்த எல்லாருமே, "என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க". உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.

ஆகையால்தான் எனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக உரையாடல் வெளியாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

desing periyasamy rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe