பிரபல பாலிவுட் இயக்குநர் சஜித்கான் தற்போது இந்தியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். முன்னதாக மீ டூ விவகாரத்தில் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதை அடுத்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் சுவாதி மலிவால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்," இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் மீது மீ டூ இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் புகார் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர். அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளது மிகவும் தவறானது. எனவே, உடனே அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்" என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால், மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதில் இருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், "எங்களது பணியை நிறுத்த விரும்புகிறார்கள். இது குறித்து டெல்லி போலீசில் புகார் அளித்துளேன். அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.