/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Vishal_2.jpg)
நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன்தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன்தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத்தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல முறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த விசாரணையில், விஷாலுக்கு சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய 2 வார காலம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களைத்திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை விஷால் மீறிவிட்டதாகவும், தற்போது வரை ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டி விஷாலுக்கு எதிராக ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தரப்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எங்களது நிறுவனம் சார்பாக எந்த படங்களையும் புதிதாகத்தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு இருப்பதாகத்தெரியவில்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும் விஷால் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்துள்ள பிரதான வழக்கில் வரும் 26 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்" என்று உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)