
ஹிந்தியில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தீபிகா படுகோன் 'கோச்சடையான்' அனிமேஷன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'பத்மாவத்' மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பு மட்டுமல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய் தயாரிப்பிலும் இறங்கவிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்... "பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். 'பத்மாவத்' படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும்.... எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்" என்றார்.