இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதியில் தொடங்கப்படும் என படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் ஒரு நேர்காணலில் தெரித்துள்ளார். முதல் பாகத்தில் கமல், வில்லனாக இறுதி காட்சிகளில் மட்டும் தோன்றியிருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் முழு நேரம் வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவை கவனமாக எடுத்துள்ளதாகவும் கல்கி மாதிரி போன்ற ஒரு படத்திற்கு கடுமையான அர்ப்பணிப்புடன் பல விஷயங்கள் தேவை என்றும் குறிப்பிட்டு தீபிகா படுகோனின் வருங்கால படங்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது. இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போன்று தீபிகா படுகோன், பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலும் முன்னதாக வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமாக 8 மணி நேரம் தான் வேலை செய்வேன், பட லாபத்தில் 10 சதவீதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தாயான பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபிகா படுகோன் பேசியதுதான் என கூறப்பட்டது. இது தொடர்பாக ஸ்பிரிட் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் தீபிகா படுகோனும் மறைமுகமாக ஒருவரை ஒருவர் சாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கல்கி 2 படத்திலும் தீபிகா படுகோன் நீக்கப்பட்டதற்கு, அவருடைய நேர வேலை மற்றும் சம்பளம் தான் காரணமா என தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து தீபிகா படுகோன் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisment