
'பாகுபலி' இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் விரிவடைந்தது. அதைப் பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'சாஹோ' படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 20ஆவது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனுடன் இப்படத்தின் பெயர் 'ராதே ஷ்யாம்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே.கே. ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியானது. தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ்.இந்த ஆண்டுஅந்த நிறுவனத்தின் 50ஆவது ஆண்டாகும். இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தைத் தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஷ்வின். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. தற்போது இந்தப் படத்திற்கு பெயர் வைக்கவில்லை என்பதால் 'பிரபாஸ்21' என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறது. அதை விமர்சிப்பதுபோல ட்விட்டரில் தீபிகா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “இப்படத்தின் பெயர் பிரபாஸ் 21 அல்ல, பிரபாஸ் நடிக்கும் 21ஆவது படம். இது மூன்று மொழிகளில் உருவாகும் படம்” என்று தெரிவித்துள்ளார்.
தீபிகாவின் இந்த ட்வீட்டால் பிரபாஸின் ரசிகர்கள் கோபமடைந்து ட்விட்டரில் தீபிகாவை விமர்சித்து வருகின்றனர். படக்குழு விரைவில் இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
