
‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி என பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் டீகே தன் 'காட்டேரி' படம் குறித்து பேசியபோது....
"என்னுடைய முதல் படம் காட்டேரி என்று சொல்லலாம். ஏனெனில் நான் இதற்கு முன் இயக்கிய இரண்டுப் படங்களைக் காட்டிலும், இந்த படத்தில் தான் நான் நினைத்ததை நினைத்தமாதிரி படமாக்க முடிந்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அழுத்தமோ, நெருக்கடியோ எனக்கு கொடுக்கப்படவில்லை. நான் என்ன கதையை சொன்னேனோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இதையே தான் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரும் சொன்னார்கள்.
இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாரர் ஜேனருக்குள் பல வெரைட்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் 'காட்டேரி'. ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது வரை உள்ள அனைத்தினருக்கும் இந்த 'காட்டேரி' பிடிக்கும். படம் முடிவடைந்துவிட்டது. வெளியீட்டிற்கு பொருத்தமான தேதிக்காகவும், திரையரங்கத்திற்காகவும் காத்திருக்கிறோம்" என்றார்.