'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் டீகே பேசுகையில், ''இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.
படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்'' எனத் தெரிவித்தார்.