கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் பகுதியில் கண்டறியப்பட்ட கரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் இந்திய அரசாங்கமும் இந்தியா முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உலகம் முழுவதும் அறியப்பட்ட பல பிரபலங்களும் அடங்குவார்கள். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் இருந்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மூன்று வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அதிலிருந்து மீண்டனர்.
அப்போது, டாம் ஹாங்ஸிற்கு கரோனா என்ற சிறுவன் அவர்களுடைய நலனைக் கடிதம் எழுதி விசாரித்துள்ளான். அதில், “என்னுடைய பெயர் கரோனா டி விரஸ், 8 வயதாகிறது. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கரோனா என அறிந்தேன், எப்படி இருக்கிறீர்கள் நலமா?. என்னுடைய பெயர் கரோனா எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், பள்ளிகளில் சக மாணவர்களை அதை வைத்து கேலி செய்யும்போது சோகமாகவும், கோவமாகவும் வருகிறது என்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்துள்ள டாம் ஹாங்க்ஸ்,

“அன்புள்ள நண்பர் கரோனாவுக்கு,
எனக்கு தெரிந்தவர்களில் இந்தப் பெயரைக் கொண்ட ஒரே ஆள் நீங்கள்தான். சூரியனைச் சுற்றி அமைந்திருக்கும் கிரீடம் போன்றது” என்று குறிப்பிட்டு, ஆஸ்திரேலியாவில் அவர் கரோனா பாதிப்பில் இருக்கும்போது பயன்படுத்திய 'கரோனா' டைப் ரைட்டரைப் பரிசாக அச்சிறுவனுக்கு தந்துள்ளார்.