உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜே பெண்டிக்ட் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 69.
1986ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ஏலியன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் பிரெஞ்ச், ஸ்பேனிஷ் போன்ற மொழிப்படங்கள் மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான இவர் உலகப்புகழ் பெற்ற 'டார்க் நைட் ரைஸஸ்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரோனா வைரசால் ஹாலிவுட் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிரண்டு ஹாலிவுட் நடிகர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது அதிர்ச்சியாக இருக்கும் இந்தச் சூழலில் இது தற்போது ஹாலிவுட் ரசிகர்களுக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.