/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_31.jpg)
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினரும் கூட. சிறு வயதிலே ராதிகா நடித்த சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் அடுத்து நடித்த அலைகள் சீரியல் முதல் அவருக்கு டேனியல் பாலாஜி என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்பு வரை பாலாஜி என்று மட்டுமே அவருக்கு பெயராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை தரமணி கல்லூரியில் இயக்குநர் படிப்பை முடித்த டேனியல் பாலாஜி, கமலின் மருதநாயகம் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக ஒரு மாதம் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக ஹாலிவுட் படங்களில் லைன் புரொடியூசராக வேலை பார்த்ததால், மருதநாயகம் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாக நக்கீரன் ஸ்டுடியோ பேட்டியில் அவரே கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு நடித்த ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் குழுவில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான காக்க காக்க படத்தில் பெரும்பாலான காட்சிகள் வரும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை பெற்றார். அவருடைய வசன உச்சரிப்பு தனித்தன்மையோடு இருந்தது. இப்படத்தை அடுத்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் சீரியசானவில்லன் ரோல் ஏற்று நடித்திருந்தார். இவரது நெகட்டிவ் ஷேட் உள்ள நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமான நடிகராக வலம் வந்தார். இந்த கதாபாத்திரமே அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது. அந்தளவிற்கு ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக தனது நடிப்பை ரசிகர்கள் மனதில் பதிவுசெய்திருந்தார்.
அதன் பிறகு அதே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திர கெட்டப் மற்றும் லுக் அவரது தனித்தன்மை இமேஜை கூட்டியது. குறிப்பாக மருத்துவமனையில், தனுஷை மிரட்டும் காட்சி ரசிகரக்ளின் ஃபேவரட்டாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வை ராஜா வை, பைரவா, இப்படை வெல்லும் என பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இதனிடையே மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் வந்த வட சென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து படங்களை கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வந்த டேனியல் பாலாஜி (48) இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)