Sai Sriram

Advertisment

பிரபல நடன இயக்குநர் சாய் ஸ்ரீராம், தற்போது 'குமாரன் சம்பவம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நம் சமூகத்தில் பரதநாட்டியம் குறித்தும் பரதநாட்டியம் கற்பது குறித்தும் நிலவிவரும் உண்மைக்கு மாறான கருத்துகளை உடைக்கும் நோக்குடன் இப்படமானது உருவாகியுள்ளது. இப்படம் குறித்து விரிவாக அறிய நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சாய் ஸ்ரீராமை சந்தித்தோம். படம் குறித்து நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட சாய் ஸ்ரீராம், பரதநாட்டியம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தவறாக காட்சிப்படுத்தப்படுவது குறித்து தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். முன்னனி நடிகர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதையும் கடுமையாகக் கண்டித்தார். அவை பின்வருமாறு...

"பரதநாட்டியம் என்று தமிழ் சினிமாவில் காட்டுவது பரதநாட்டியமே அல்ல. ஒரு மேக்கப் கலைஞருக்கு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஞானம் இல்லையென்றால் அமெரிக்காவரை சென்று அங்குள்ள ஒருவரை அழைத்து வர்றீங்க. ஒரு ஃபைட் மாஸ்டருக்கு சண்டைக்காட்சியில் ஞானம் இல்லையென்றால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வர்றீங்க. ஆனால், பரதநாட்டியம் விஷயத்தில் அருகில் உள்ள கலைஞர்களைக் கூட ஏன் அழைக்கமட்டுக்கீங்க. பரதநாட்டியம் என்பது நம்முடைய நாட்டின் பெருமை. அதை ஏன் புரிஞ்சுக்கமட்டுக்கீங்க.

சினிமாவில் காட்டப்பட்ட அபத்தமான காட்சிகளையெல்லாம் வைத்து தமிழ்ப்படம் என்று ஒருவர் படம் எடுத்தார். அவரை சினிமாக்காரங்க எவ்வளவு திட்டுனாங்க. இங்க 35 வருஷமா பரதநாட்டியம் கலையை தவறாகக் காட்டுறீங்க. விஸ்வரூபம் படத்துல கமல் ஏன் அப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த விவரணையும் இருக்காது. அவர் பரதநாட்டிய கலைஞர் என்பதால் பெண்மைத் தன்மையுடன் இருக்கிறார்; அதனால் அவர் பொண்டாட்டி அவரை வெறுக்கிறார் எனக் காட்டியிருப்பாங்க. இது எவ்வளவு பெரிய தவறான முன்னுதாரணம். சலங்கை ஒலி என்பது கமல்ஹாசனின் கிரீடத்தில் உள்ள ஒரு கோஹினூர் வைரம்போல. பரதநாட்டியம் மூலம் அவ்வளவு பெயரும் புகழும் சம்பாதித்த ஒருவர் இதைச் செய்யலாமா?

Advertisment

வரலாறு படத்திலும் இதேதான். அஜித்திற்குப் பரதநாட்டியம் என்றால் என்னன்னே தெரியாது. இது மாதிரி ஒரு கேரக்டர் வருதுன்னா அதை ஏற்று நடிக்க நமக்குத் தகுதி இருக்கான்னு யோசிக்கணும். குறைந்தபட்சம் ஒரு மாதமாவது பயிற்சி எடுக்கணும். அதைவிடுத்து, 8 மணிக்கு ஸ்பாட்க்கு வந்துட்டு 9 மணிக்கு நாட்டிய எக்ஸ்பர்ட் மாதிரி நடிப்பது எப்படி சாத்தியம். உங்களுடைய பெயரை நிலைநாட்டிக்கொள்ள ஒரு கலையை ஏன் கெடுக்குறீங்க" எனக் கூறினார்.