தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சங்கத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என ஒரு தரப்பு அவர் மீது புகார் வைத்தனர். அதாவது சங்கத்தின் முன்னாள் தலைவரான மாரி என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தனது நண்பர் என்பதால் தினேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், லியோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் பாக்கி விவகாரத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைகள் குறித்து கன்னடாவில் வசிக்கும் நடனக் கலைஞரான கௌரி சங்கர் என்பவர், சங்கத் தலைவரான தினேஷிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கௌரி சங்கர் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்து சங்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிலர் கௌரி சங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு சீ.சி.டி.வி. காட்சியும் வெளியானது. இதனால் இரு தரப்பாக பிரிந்து இந்த விவகாரம் வெடித்துள்ளது.
இந்த சூழலில் சங்க துணைத் தலைவர் தலைமையில் அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டி அதில் தினேஷ், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அடுத்த தேர்தலில் அவர் நிற்க கூடாது என்றும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தலைவர் தினேஷிடம் கொடுக்க சென்ற போது, தினேஷ் தரப்பிற்கும் தீர்மானம் கொடுத்த தரப்பிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சங்கத் துணைத் தலைவர் கல்யாண் மாஸ்டர் கூறுகையில், எந்த பிரச்சனைக்கும் தினேஷ் கையெழுத்து போடுவதில்லை என்றும் அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுக்க சென்ற போது அதை வாங்காமல் அவரது ஆட்கள் ரௌடிசம் பண்ணுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தினேஷ் தற்போது தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கௌரி சங்கர், கன்னடாவில் செட்டிலாகிவிட்டார். 25 வருஷத்துக்கு மேலாக அங்கு வசிக்கிறார். இப்போது இங்கு நடனம் பண்ணுவதில்லை. அவரை வெளியூரில் இருப்பவர்கள், வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் போடுங்கன்னு சொல்லியிருக்கிறார்கள். அதனடிப்படையில் அவர், என்னை தகுதியற்ற தலைவர் என சொன்னார். அவர் சொன்னது என்னை ஒரு மாதிரி நெருடலாக்கிவிட்டது.
அவரை கமிட்டியில் கூப்பிட்டு பேசலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு நாள், நான் சங்கத்தில் ரிகர்சல் பண்ணிக்கொண்டு இருக்கும் போது, நேரில் வந்தார். அன்னைக்கு என் மகளும் என்னுடன் இருந்தார். அதனால் கௌரி சங்கரை வெளியில் அழைத்து போய் பேசினோம். அப்போது வாக்குவாதம் நடந்தது. பின்பு அவர் தகாத வார்த்தையில் பேசி என் அருகில் இருந்த நிர்வாகி ஒருவரின் சட்டையை பிடித்தார். அதனால் அவரை தட்டிவிட்டேன். பதிலுக்கு அவரும் தள்ளி விட. என் கூட இருந்த ஆளுங்களுக்கும் அவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வெளியான சீ.சி.டி.வி. வீடியோவில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
அவர் தள்ளியது தொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை. அவர் கன்னடாவில் வசிப்பதால் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. இப்போது ஏன் அது பெரிதாக வெடித்தது என்றால், சில பேர் இதில் ஆதாயம் அடைய நினைக்கிறார்கள். அவர்கள் செய்வதுதான் இந்த வேலை. இதுதான் உண்மை” என்றார்.