Skip to main content

கங்கனா மீது குவியும் புகார்... திக்குமுக்காடும் போலீஸ்! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
kangana ranaut

 

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் பல கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

 

அண்மையில் கூட, மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 

இது பெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்திருந்தார்.

 

அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9ம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவிற்கு, ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு, புல்டோசரை கொண்டு இடித்து தள்ளியுள்ளனர். இதனிடையே மும்பைக்கு புறப்பட்டார் கங்கனா. மேலும் அவரது அலுவலகத்தை இடித்து தள்ளும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

இந்நிலையில் 9ஆம் தேதி இரவு மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், திரைப்பட மாபியாக்களுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று கூறியுள்ளார். மேலும் பால் தாக்கரேவையும் உத்தவ் தாக்கரேவையும் ஒப்பிட்டும் பேசியுள்ளார். 

 

கங்கனா வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடும் வைரலானது. ஏறக்குறைய 50 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் கங்கனா பேசியிருப்பதாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் கங்கனாவின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை விக்ரொலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கங்கணா மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது. கங்கனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என பாஜகவினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினரும் போலீஸாரை அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் மஹாராஷ்ட்ரா போலீஸ் திக்குமுக்காடி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்