Court orders removal of Leo photo banners placed without permission in dindigul

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத்தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணிக்குத்தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே லியோ படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் 7 மணி கட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து இன்றைக்குள் முடிவை அறிவிக்கவுள்ளதாக உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு இடையூறுஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி புகார் மனுவைத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய அனுமதியின்றி லியோ படத்தின் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றவும் அரசு தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு.