மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டின் போது, தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்து கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தி படத்திற்கு தடை விதித்தது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் படத்தை வெளியிட அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அங்கு படம் வெளியாகவில்லை. இப்படம் நேற்று(04.07.2025) ஓ.டி.டி. வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமலுக்கு எதிராக கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த அமைப்பு சார்பில் அதன் தலைவர் மகேஷ் ஜோஷி தொடர்ந்த வழக்கில் கமல்ஹாசன் கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், கமல்ஹாசன் கன்னட மொழி, கலாச்சாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதி தள்ளி வைத்தது.