Court orders censor certificate for Vijay Jana Nayagan movie
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன்படி, இந்த வழக்கை அவசர வழக்காக நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் (07-01-26) நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருக்கிறது. அதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மறு தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் தணிக்கை குழுவிற்கு கிடையாது’ என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி யார் புகார் கொடுத்தார் என்பதை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி, தணிக்கை வாரியம் சார்பில் யார் புகார் கொடுத்தார் என்ற விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று (09-01-25) வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் நீதிபதி ஆஷா இன்று (09-01-25) தீர்ப்பளித்தார். அதில் ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்தார். இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது, “ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்?. பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும். படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது’ என்று கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us