தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் கூட்டமைப்பை உருவாக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தனர். இதற்கு ஃபெப்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியது.
இதனிடையே ஃபெப்சி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் தங்களது சங்க உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் என சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு மத்தியஸ்தரை நியமிக்கலாம் எனக் கூறி இரு தரப்பும் யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என்பதை கலந்தாலோசித்து சொல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டு இன்று தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பும் சொன்ன ஓய்வு பெற்ற நீதிபதியான கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டார். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில், படத் தயாரிப்புக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் முறையாக ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஃபெப்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்பு நீதிபதி இந்த வழக்கில் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி உத்தரவு விட மறுத்து விட்டார்.