shooting

கரோனா அச்சுறுத்தாலால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா பட ஷூட்டிங்கும் தடை பட்டுள்ளது. தற்போதுதான் ஊரடங்கு உத்தரவுகளில் சில தளர்வுகள் அளித்திருப்பதால் சினிமா ஷூட்டிங்கிற்கு உரிய பாதுகாப்புகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன. தமிழ்நாடு அரசு இன்னும் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவில்லை.

Advertisment

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்ட்ரா. இதனால் கடும் நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்திருந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிப்பது, படப்பிடிப்பில் குறைவானவர்களே கலந்துகொள்வது, 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் படப்பிடிப்புக்கு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

Advertisment

இந்நிலையில் மகாராஷ்ட்ரா அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்த நடிகர் ப்ரமோத் பாண்டே கடந்த ஜூலை 21 அன்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''மற்ற தொழில்கள் செய்ய எல்லா வயதினரும் அனுமதிக்கப்பட்டுள்ளபோது, நடிப்பதற்கு மட்டும் வயதானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது சரியல்ல'' என்று கூறினர். இந்த விஷயத்தில் அரசின் முடிவு பாரபட்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மும்பை நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) வரவேற்பு தெரிவித்துள்ளது.