லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘கூலி அன்லீஷ்ட்’ என்ற பெயரில் நடந்த இந்த விழாவில் ஸ்ருதி ஹாசன், தனது பட அனுபவங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது.
இவ்விழா சன் டிவியில் ஆகஸ்ட் 10, மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பாவதற்கு முன்னாடியே சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.