இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கூலி’ படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரம்மாண்ட ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக கடந்த மே மாதம் குறைக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதனால் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மேலும் கூலி படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள், புதுச்சேரியில் படத்தை வெளியிட தயங்குதாக தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரங்கசாமி, இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறினார்.
இந்த நிலையில் புதுச்சேசி அரசு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. கேளிக்கை வரி மூலம் ரூ.5 கோடி வரை வருவாய் வருவதால் அதை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூலி படம் குறைவான திரையரங்குகளிலே வெளியாகிறது.