ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்த்தை லுக் டெஸ்ட் செய்த புகைப்படத்தை சமீபத்தில் லோகேஷ் கனகராக் வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. முதலில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்தது, அதையடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு கலீஷா என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ரஜினி போஸ்டரை குறிப்பிட்டு “தெறிக்க போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.