லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து கடந்த மார்ச் மாதம் முடிந்திருந்தது. இதனிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின்பு ‘சிக்குடு வைப்’ என்ற பாடலில் கிளிம்ஸ் வெளியாகியிருந்தது. அடுத்தாக படம் வெளியாகுவதற்கு 100 நாட்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியானது. இதில் பின்னணியில் இடம் பெற்ற ‘பவர்ஹவுஸ்’ பாடம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ‘சிக்குடு வைப்’ பாடலின் மியூசிக் வீடியோ மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ பாடலின் லிரிக் வீடியோ ஆகியவை வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் வைரலான ‘பவர்ஹவுஸ்’ பாடல் மூன்றாவது பாடலாக வெளியாகவுள்ளது. இப்பாடல் வருகின்ற 22ஆம் தேதி ஹைதராபாத்தில் இரவு 9.30 மணியளவில் வெளியாகவுள்ளது. பாடல் நிகழ்ச்சிக்கு அனிருத் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.