ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு  மாஸ்  ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

Advertisment

கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக பெறும் வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் நான்கு நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியாகியிருந்தது. இதனால் குழந்தைகள் திரைப்படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் குழந்தைகளுடன் சில குடும்பத்தினர் படம் பார்க்க சென்றிருந்தனர். ஆனால் அவர்களை திரையரங்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 

படத்தை பார்த்த பலரும் இப்படத்திற்கு எதற்கு ‘ஏ’ சான்றிதழ் என சமூக வலைதளங்களில் கேள்வியும் எழுப்பினர். அதற்கு படத்தில் துறைமுகங்கள் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்குத் தவறான பெயரை பெற்றுக் கொடுக்கும் என சென்சார் போர்டு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக பதில்கள் பகிரப்பட்டது. இந்த நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளது. அந்த மனுவில் கூலி படத்தை விட அதிக வன்முறை இருந்த கே.ஜி.எஃப். மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.