ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக பெறும் வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவின் போதே முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லானது.
இந்த நிலையில் இப்படத்தின் 4 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ.404 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய நாட்களில் 400 கோடி வசூலித்த முதல் படமாக கூலி அமைந்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.