
தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சாம். சி.எஸ். குறிப்பாக பல்வேறு முன்னணி நட்சத்திர படங்களுக்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்து வருகிறார். தமிழில் கடைசியாக வணங்கான் படத்திற்கு பின்னணி இசையமைத்திருந்தார். தெலுங்கில் புஷ்பா 2 படத்திற்கு கூடுதல் பின்னணி இசையமைப்பாளராக பணியாற்றினார். இப்போது அவர் பின்னணி இசையமைத்துள்ள விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் வருகின்ற 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இசையமைப்பாளராக சர்தார் 2, ரெட்ட தல உள்ளிட்ட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சாம் சி.எஸ். மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் இந்த புகாரை கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு எனும் படத்திற்கு ரூ.25 லட்சம் இசையமைக்க வாங்கிவிட்டு படத்திற்கு இசையமைக்காமலும் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சாம் சி.எஸ். விரைவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.