சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு

complaint registered against actor siddique

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைத்தது கேரள அரசு.

இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016ஆம் ஆண்டு மஸ்கட் விடுதியில் மூத்த நடிகர் சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்த புகாரை மறுத்திருந்தார். மேலும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தொடர் பாலியல் புகார்கள் தொடர்பாக மலையாள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கேரள டிஜிபி-யிடம், தன் மீது ரேவதி சம்பத் பொய் குற்றச்சாட்டு வைத்ததாக சித்திக் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor Actress Kerala mollywood
இதையும் படியுங்கள்
Subscribe