Skip to main content

‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு

Published on 14/05/2025 | Edited on 14/05/2025
complaint agianst j guru biography movie Padai Yaanda MaaVeeraa

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படம் மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் மோஸ்டர் மற்றும் புலிக்கொடி என்ற முதல் பாடலும் சமீபத்தில் வெளியானது. 

இப்படத்திற்கு எதிராக வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் பா.ம.க-வின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த மறைந்த ஜெ.குரு குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர். ஜெ.குருவின் மனைவி கல்யாணி கொடுத்த மனுவில், “இயக்குநர் வ.கௌதமன் ஜெ.குருவின் வாழ்க்கிஅயை மையமாக வைத்து படையாண்ட மாவீரா என்ற பெயரில் தனது அனுமதி இல்லாமல் எடுத்துள்ளார். ஜெ.குரு மறைந்த போது அவரது உடலை பார்க்க விடாமல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி தடுத்தனர். அதனால் ஜெ.குருவின் மறைவில் தங்களுக்கு சந்தேகம் இருக்கும் நிலையில் ராமதாஸுக்கு நெருக்கமான கௌதமன் ஜெ.குருவின் வாழ்க்கையை தவறாக சித்தரிக்க வாய்ப்புள்ளது. மே 23ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனு தொடர்பாக  கௌதமன் மே 15ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்