மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மேலும் பிரபலமடைந்தார். 

திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்து வந்தாலும் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். பொதுவெளியில் இவரது செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளது. மீடூ விவகாரத்தில் சர்ச்சையான கருத்து தெரிவித்தது முதல் சமீபத்தில் ஒரு கடையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டது வரை நிறைய சர்ச்சையான விஷயங்கள் இதில் அடங்கும். குறிப்பாக மது போதையில் அவர் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

2023ஆம் ஆண்டு கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இறந்தபோது, “யார் இந்த உம்மன் சாண்டி...அவரை நல்லவர் என்று நான் சொல்ல மாட்டேன்” எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. மேலும் வழக்கும் விநாயகன் மீது பதியப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி இறந்த, கேரள முன்னாள் முதல்வரும் சி.பி.எம் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவையொட்டி விநாயகன் போட்ட ஃபேஸ்புக் பதிவு தற்போது காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. 

Advertisment
266
வி.எஸ்.அச்சுதானந்தன்

விநாயகன் போட்ட பதிவில், “என் தந்தையும் இறந்துவிட்டார், சகாவு வி.எஸ்.அச்சுதானந்தனும் இறந்துவிட்டார். காந்தியும் இறந்துவிட்டார், நேருவும் இறந்துவிட்டார், இந்திராவும் இறந்துவிட்டார், ராஜிவ் காந்தியும் இறந்துவிட்டார், கருணாகரனும் இறந்துவிட்டார். ஹைபி ஈடனின் தந்தை ஜார்ஜ் ஈடனும் இறந்துவிட்டார். உங்கள் தாயின் நாயர் சாண்டி என்றால் அவரும் இறந்துவிட்டார். இறந்துவிட்டார்... இறந்துவிட்டார்... இறந்துவிட்டார்...” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸின் எர்ணாகுளம் மாவட்டத்தின் தலைவர் சிஜோ ஜோசஃப், விநாயகன் மீது கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகாரில், விநாயகனின் ஃபேஸ்புக் பதிவு காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் படிப்பவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே வி.எஸ்.அச்சுதானந்தனின் இரங்கல் பேரணியில் விநாயகன் கலந்து கொண்டு முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.