/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/365_12.jpg)
புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை, கொச்சி என பல்வேறு இடங்களில் நடந்த நிலையில் மும்பையிலும் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூன் படம் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பேசினார். பொதுவாக தனது ரசிகர்களை ஆர்மி எனக் குறிப்பிடும் அவர், இந்த நிகழ்ச்சியிலும் அதை தொடர்ந்தார். ஆனால் தற்போது அவர் கூறியது சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, “எனக்கு ரசிகர்கள் இல்லை. என்னிடம் ஆர்மி உள்ளது. நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன். அவர்கள் என் குடும்பம் போன்றவர்கள். அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். அவர்கள் ஒரு ஆர்மியைப் போல எனக்காக நிற்கிறார்கள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால், எனது ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வேன்” என்றார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் ஆர்மி என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சீனிவாஸ் என்பவர் ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “அல்லு அர்ஜுன் தனது ரசிகர் கூட்டத்தை ஆர்மி என அழைக்க வேண்டாம். ஆர்மி என்பது ஒரு கௌரவமான பதவி. அவர்கள் நம் நாட்டைப் பாதுகாப்பவர்கள். எனவே உங்கள் ரசிகர்களை அப்படி அழைக்க முடியாது. அதற்கு பதிலாக அவர் பயன்படுத்தக்கூடிய பல சொற்கள் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)