Skip to main content

செந்தில் + வடிவேலு + சந்தானம் = யோகி பாபு? கவனமா இருக்க வேண்டிய விஷயங்கள்!

yogibabu

 

தமிழ் சினிமாவில் காமெடிக்கென தனி இடம் எப்போதும் உண்டு. முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர் கூட்டத்தினை காமெடி நடிகர்களும் தங்கள் பக்கம் கொண்டுள்ளனர். 'சபாபதி' காலத்திலிருந்து பின்னர் கலைவானர், நாகேஷ், தங்கவேலு  என தொடர்ந்து கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி,யோகி பாபு என ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களை வெடித்து சிரிக்கவைத்த காமெடி நடிகர்கள் பலர். அந்த வகையில் இன்றைய தமிழ் சினிமாவை கையில் வைத்திருக்கும் காமெடி நாயகன் யோகி பாபுதான். சமீபத்தில் வெளியாகிற அத்தனை படங்களிலும் நடித்து பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவின் பிறந்த தினம் இன்று.

 

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவோடு திரிந்து கொண்டிருந்த யோகி பாபுவுக்கு திடீரென 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடிப்பதற்கான வாய்ப்பு வருகிறது. தேடிவரும் வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று நினைத்து நடிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான தோற்றம் மற்றும் முக அமைப்பிற்காக இங்கு வாய்ப்பு கிடைத்தது போல சினிமாவிலும் கிடைத்துவிடும், பெரிதாக சாதித்து விடலாம் என்ற கனவோடு வாய்ப்பு தேட ஆரம்பிக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. வாய்ப்பு தேடிய இடங்களில் எல்லாம் அவரின் உருவம் கண்டு எள்ளி நகையாடி அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த யோகிபாபுவிற்கு நீண்ட போராட்டத்திற்கு பின் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'யோகி' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அடுத்தடுத்த படங்களில் சிறிய வேடமாக இருந்தாலும் கடினமாக உழைத்துள்ளார். ஒரு வழியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படம் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. அதன் பிறகு 'ஆண்டவன் கட்டளை'யில் ரசிகர்களை இன்னும் கவர்ந்தார். பின் அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் சில பல படங்களில் தானே ஹீரோவாக நடித்தும் தமிழ் சினிமாவில் இன்று தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

 

yogibabu2

 

முன்னர் குறிப்பிட்டது போல யோகிபாபுவின் சிறப்பம்சமே அவரது முக அமைப்பும், தலைமுடியும்தான். இதை எல்லாம் தாண்டி யோகி பாபுவின் காமெடியில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கலாம். அவரிடம் நாம் இதுவரை ரசித்துகொண்டாடிய பல காமெடி நடிகர்களின் சிறப்பம்சங்களும் கலந்து இருக்கும். செந்தில், தனது தோற்றத்தை வைத்தும் கவுண்டமணியிடம் அடி வாங்கியும் கிண்டல் செய்யப்பட்டும் நம்மை சிரிக்க வைத்தார். வடிவேலு, எப்போதுமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டும், பாதிக்கப்பட்டும், மிக இயல்பான சூழ்நிலைகளில் வித்தியாசமான நடத்தையை செய்தும் நம்மை சிரிக்கவைத்தவர். சந்தானம், இளம் நண்பர்கள் குழுவில்  ஹீரோ உள்பட அனைவரையும் கலாய்த்து காமெடி செய்பவர். கவுண்டமணியின் ஸ்டைலை பின்பற்றியவர். இந்த மூவரின் தன்மைகளும் வெவ்வேறு படங்களில் யோகிபாபுவிடம் இருப்பதை காணலாம். ஒரே படத்தில் இவை மாறி மாறி வெளிப்படுவதையும் காணலாம்.

 

சில ஆண்டுகளுக்கு முன்புவரை முன்னணி நடிகர்களை கேலிக்குள்ளாக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இருந்தது இல்லை. அதற்கு முன்பு கவுண்டமணி ஹீரோக்களை கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் தற்போது யோகிபாபுவின் வருகை நிலைமையை மாற்றியது. தர்பார் திரைப்படத்தில் ரஜினியையே கிண்டல் செய்யும்  பாத்திரம் ஏற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார் பாபு. முன்னணி நடிகர்களே இதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் யோகி பாபுவின் காமெடிக்கு எவ்வளவு பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

 

'பிகில்' இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யோகிபாபு நிற்க நேரமில்லாமல் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதை நகைச்சுவையாக சொன்னது குறிப்பிடத்தக்கது. 'கோலமாவு கோகிலா' படத்தில் நடிகை நயன்தாராவை துரத்தித் துரத்தி காதலிக்கும் காட்சிகள் எல்லாம் அவரது நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. யோகிபாபுவின் திருமணம் ட்ரெண்டானது. இப்படி தனது திறமையால் மக்களின் அன்பை பெற்று வெற்றிகரமாக வளம் வருகிறார் யோகிபாபு. சில திரைப்படங்களில் யோகிபாபுவின் தோற்றம் எல்லை மீறி கிண்டல் செய்யப்படுவதும் சில படங்களில் யோகிபாபு எது பேசினாலும் காமெடி என்று நம்பப்படுவதும்தான்  யோகிபாபு கவனமாக இருக்க வேண்டிய புள்ளிகள்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்