Advertisment

"கமல் எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்... அன்னைக்கு நைட்டு தூக்கமே வரல” - வடிவேலு

தமிழ் சினிமாவின் பெருமையாகத் திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. அவர் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகளானதையும் கொண்டாடி வருகின்றது தமிழ் சினிமா. நகைச்சுவை நடிகர் வடிவேலு, கமல்ஹாசன் தனக்கு அளித்த நல்வாய்ப்பு குறித்தும் அவருடனான தனது பழக்கம் குறித்தும் நக்கீரனில் எழுதிய தொடரில் பகிர்ந்தது...

Advertisment

vadivelu speech

"பிரார்த்தனா ட்ரைவ்-இன் தியேட்டர்ல "சிங்காரவேலன்' படத்தோட ஷூட்டிங் நடக்குது. கமலோட பிரெண்டுகள்ல ஒருத்தனா அதுல நானும் நடிச்சுக்கிட்டிருக்கேன். ஷூட்டிங் பிரேக்ல நாம்பாட்டுக்கு. ஒரு ஓரமா போய் நிக்கிறேன். கமல் சார் என்னயவே பாக்குறாரு. கிட்ட வர்றாரு. அப்புடியே ஏந்தோளுமேல கையப்போட்டுக் கிட்டு "கொஞ்சம் நடந்துகுடுத்துட்டு வரலாம்'ங்கிறாரு. "ஆத்தாடீ... எம்புட்டு பெரிய நடிகரு. நம்ம தோள்ல கையப் போட்டு பேசுறாரே'னு மனசு பரபரக்குது. அவரு கூட போறேன். யூனிட்டு இருக்க எடத்த விட்டு கடேசிக்கு வந்துட்டம்.

‘"வடிவேலு ஒங்களுக்கு எந்த ஊரு?"னு கேக்குறார்.

‘"மதுரதேங்க சார்."

‘"மதுரயேவா.?"

"ஆமாங்க சார். அம்மா ஊரு செவகங்க பக்கம். எங்க கொலசாமி கோயிலு பரமக்குடிக்கிட்டத்தான் இருக்கு."

தலய ஆட்டிக்கிட்டாரு கமல்.

"ஒங்களுக்கு என்னென்ன தெரியும்?"

"எதுங்க சார்?"

"ஒங்களுக்கு சினிமா சம்பந்தமா என்னென்னா தெரியும்?"

"ஆடுவேன்... நல்லா பாடுவேன்."

"கத்துக்கிட்டீங்களா?"

"மொறயா கத்துக்கல. ஆனா கேள்வி ஞானம்பாங்களே... அப்புடித்தான் தெரியும்."

அடுத்த நிமிஷமே அங்ஙனக்குள்ளயே பாடூங்கிறாரு.

singaravelan

Advertisment

நானும் யோசிக்கல. டி.எம்.எஸ். பாட்டு... அதுவும் எம்.ஜி.ஆரு பாட்டுன்னா எனக்கு உசுராச்சே... எடுத்துவிட்டேன் சவுண்டா ஒரு பாட்ட. சிரிச்சாரு.

"என்னோட ஆபீஸ் போங்க. அங்க டி.என்.எஸ். இருப்பாரு. அவரப் போயி பாருங்க... நாளைக்கி காலைல போய் பாருங்க"ன்னாரு.

மறுபடி ஷூட்டிங் தொடங்குது. எனக்குன்னா இருப்பு கொள்ளல. ஷூட்டிங் முடிஞ்சதுமே 'கௌம்புடா வடிவேலு'னு கௌம்பீட்டேன் எல்டாம்ஸ் ரோட்டுக்கு.

டி.என்.எஸ். சாரைப் பாத்தேன். ஒரு கவர குடுத்தாரு. சஸ்பென்ஸ்ல மண்ட வெடுச்சிரும் போல இருந்துச்சு. வெளிய வந்து பிருச்சுப் பாத்தேன்.

'டக்குடு டக்குடு டக்குடு டக்குடு'னு உள்ளுக்குள்ள சந்தோஷத்துல குருத ஓடுது. ஆனந்தத்துல கண்ணீரும் பொங்குது.

'தேவர் மகன்' படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பும் அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கும். மிஞ்சிப்போனா ரெண்டாயிரத்துக்கு மேல ஸிங்கிள் பேமண்டு வாங்கினதில்ல. மொத மொதல்ல... அஞ்சாயிரம். அதுலயும் நான் வாங்குன மொதல் செக்கு. நைட்டெல்லாம் எங்க தூக்கம் வந்திச்சு?!

காலேல திரும்பவும் ‘சிங்காரவேலன்' ஷூட்டிங் ஸ்பாட்டு.

"நேத்தே போயிட்டிங்க போலருக்கு?"கேட்டாரு கமல்.

"காலேல வரைக்கும் தாங்காது சார். அதான்..."னு இழுத்தேன். சிரிச்சார்.

vadivelu in thevar magan

'தேவர் மகன்'ல வர்ற அந்த இசக்கி கேரக்டரு எனக்கு பெரிய வாழ்க்கய தந்துச்சு. படத்தோட பிரிவியூ ஷோ போட்ருக்காங்க. ஆஸ்பத்திரியில கைவெட்டுப்பட்டு கடப்பேன். கமல் சார் பாக்க வருவாரு. அப்ப சொல்லுவேன்... ‘"என்னா எழவு... திங்கிற கைலயே கழுவணும், கழுவுற கைலயே திங்கணும்'னு சொல்லுவேன். நான் வர்ற ஸீனப் பாத்திட்டு சிவாஜி அய்யா கமல் சார்கிட்ட சொல்றாரு... "யார்ரா இவேன். பெரிய்ய ஆளா வருவாண்டா"ங்கிறாரு.

நடிகர்திலகம் நம்மளப் பத்தி எதாச்சும் சொல்லாதான்னு ஏங்கிப் போயித்தான ஒக்காந்திருந்தேன். 'சடக்'குன்னு அவரு கால்ல விழுகுறேன்.

"இவேன் யாருடா?"ங்கிறாரு.

"நாந்தேய்யா வடிவேலுங்கய்யா"ங்கிறேன் கம்முன குரல்ல.

"டேய்ய்... நீதாண்டா ஒரிஜினல் மதுர பாஷ பேசீருக்க"னு என்னய தட்டிக்குடுக்குறாரு. ஒடம்பே சிலுத்துப் போகுது எனக்கு.

இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு."

actor kamal hassan actor Vadivelu
இதையும் படியுங்கள்
Subscribe